×

8வது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியது; மோடி, எதிர்கட்சிகள் தனித்தனியாக ஆலோசனை: நீண்ட இழுபறிக்கு பின் பிற்பகலில் மணிப்பூர் பிரச்னை விவாதம்

புதுடெல்லி: மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் விளக்கமளிக்க எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இன்று 8வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. பிரதமர் மோடி, எதிர்கட்சி தலைவர்கள் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர். நீண்ட இழுபறிக்கு பின் இன்று மதியம் மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மணிப்பூர் வன்முறை, 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் பிரதமர் மோடி, இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கவில்லை. அதனால் பிரதமரை பேசவைக்கும் பொருட்டு காங்கிரஸ் சார்பில், ஒன்றிய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் எப்போது நடத்தப்படும் என்ற அறிவிப்பை இன்னும் மக்களவை சபாநாயகர் வெளியிடவில்லை. இதற்கிடையே ‘இந்தியா’ கூட்டணியை சேர்ந்த 21 எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் குழுவினர் நேற்று முன்தினம், மணிப்பூர் சென்றனர். அங்கு அவர்கள் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்துப் பேசினர். இதையடுத்து கோரிக்கை மனுவை மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கேவிடம் வழங்கினர். பின்னர் அவர்கள் கூறுகையில், ‘மணிப்பூரில் கடந்த 3 மாதங்களாக நீடித்து வரும் இனக் கலவரத்தில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 5,000-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. 60,000 பேர் இடம்பெயர்ந்து உள்நாட்டிலேயே அகதிகளாக மாறியுள்ளனர். இனமோதலை கட்டுக்குள் கொண்டு வருவதில் ஒன்றிய, மாநில அரசு இயந்திரங்கள் முற்றிலும் தோல்வியடைந்துள்ளன. இந்த விவகாரத்தில் பிரதமரின் மவுனம் அவரது அலட்சியத்தை எடுத்துக்காட்டுகிறது’ என்றனர்.

இந்நிலையில் நேற்று டெல்லி திரும்பிய 21 எம்பிக்களும், நாடாளுமன்ற கட்டிடத்தில் நடந்த ‘இந்தியா’ கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் தாங்கள் மணிப்பூர் சென்று வந்த விபரங்களை தலைவர்களிடம் எடுத்து கூறினர். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், ‘அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நடத்த வேண்டும் என்பது மட்டுமே எங்களது கோரிக்கை. மணிப்பூரில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. நாட்டை காப்பாற்ற வேண்டும். பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மணிப்பூருக்கு சென்று வரவேண்டும்’ என்றார்.

எதிர்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் போல், பிரதமர் மோடி தலைமையில் மூத்த அமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கூறுகையில், ‘நாடாளுமன்ற அலுவல் பட்டியலில் குறிப்பிட்டுள்ள மசோதாக்கள் மட்டுமே இன்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும். டெல்லி அரசு ெதாடர்பான அவசரச் சட்ட மசோதா கொண்டு வரும் போது தெரிவிப்போம். மணிப்பூர் சம்பவம் குறித்து விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது. எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஏற்கப்பட்டது. ஆனால் அவர்கள் (எதிர்கட்சிகள்) பிரதமர் அவையில் பேச வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இந்த விவகாரத்தை அரசியலாக்கி உள்ளனர். அதற்காக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். சபாநாயகர் முடிவெடுத்த பின்னர், நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதம் நடைபெறும்’ என்றார்.

இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், ‘நாடாளுமன்ற அலுவல்கள் நடக்கும் அடுத்த 10 நாட்களுக்குள் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதம் நடத்தப்படும்’ என்றார். ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், ‘மணிப்பூர் விசயத்தில் விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது. ஆனால் அவர்கள் (எதிர்கட்சிகள்) விவாதத்தில் பங்கேற்க மறுக்கின்றனர். இதன்மூலம் எதிர்கட்சிகள் அரசியல் செய்கிறார்கள் என்பது தெளிவாகி உள்ளது’ என்றார். ெதாடர்ந்து இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் 8வது நாள் கூட்டத் தொடர் தொடங்கியது. மக்களவையில் மணிப்பூர் விவகாரத்தை எதிர்கட்சிகள் மீண்டும் எழுப்பின. அதனால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

அதேநேரம் மாநிலங்களவை கூடியதும், பாஜக மூத்த அமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில், ‘மணிப்பூர் தொடர்பான விவாதம் இன்று பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்றத்தில் நடைபெற வேண்டும். அவர்களுக்கு (எதிர்க்கட்சிகள்) வழங்கப்பட்ட சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த முயற்சிக்கின்றனர். ஏற்கனவே நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளை முடக்கி வைத்துள்ளனர்’ என்றார். தொடர்ந்து எதிர்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பியதால் இன்று பிற்பகல் 12 மணிக்கு அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் மாநிலங்களவை கூடியது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மீண்டும் எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

The post 8வது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியது; மோடி, எதிர்கட்சிகள் தனித்தனியாக ஆலோசனை: நீண்ட இழுபறிக்கு பின் பிற்பகலில் மணிப்பூர் பிரச்னை விவாதம் appeared first on Dinakaran.

Tags : Parliament ,Modi ,Manipur ,New Delhi ,Manipur problem ,
× RELATED வெளிநாட்டு முகவர் மசோதாவை சட்டமாக்க...